வெற்று வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – அண்ணாமலை கடும் விமர்சனம்……..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதாக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

”கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்தோம். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

 ஏற்கனவே, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த ஐந்து ஆண்டுகளில், கொடுக்கப்பட வேண்டிய சுமார் ₹60,000 ஊக்கத்தொகை எப்போது வருமென்று தெரியவில்லை.

இப்படி தொடர்ந்து வெற்று வாக்குறுதிகள் கொடுத்து யாரை ஏமாற்றலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்பது தெரியவில்லை.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பிடித்த “பேரு பெத்த பேரு, தாக நீலு லேது” என்ற தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.