சென்னை தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதையை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாகவே தியாகராய நகர் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய பகுதியாக இருக்கிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லக்கூடிய பகுதியாக தியாகராய நகர் பகுதி இருக்கும்.
அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் இந்த பகுதியில் கூடுவதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு சிரமப்படுவதோடு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
பொதுமக்கள் வசதிக்காக தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தியாகராய நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாம்பலம் மின்சார ரயில் நிறுத்தம் வரை உயர்மட்ட நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரூபாய் 28.45 கோடி மதிப்பீட்டில் 600 மீட்டர் தொலைவில் 4 மீட்டர் அகலத்தில் இரும்பு தூண்களால் ஆன உயர்மட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆகாய நடைபாதை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக உறுதியான இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மழை மற்றும் வெயில் தாக்காத வண்ணம் உறுதியான மேற்கூரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதை படிகள், சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு உதவும் வகையில் கழிப்பறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கிகளுடன் கூடிய இந்த நீண்ட ஆகாய நடைபாதையை (Skywalk) மக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







