தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் “முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை தியாகராய நகரில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள “முதல்வர் மருந்தகம்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள 51 “முதல்வர் மருந்தகம்” திறக்கப்பட்டது. மதுரை செனாய் நகர் பகுதியில் உள்ள “முதல்வர் மருந்தகம்” அமைந்துள்ள இடத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11 மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வர் மருந்தகம்” என்ற திட்டம் தொடங்கப்படும் என்றார். இதன் மூலம், பொதுமக்களுக்கு, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

அதற்கு ஏற்ப, தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.