ஆஸ்கர் விருது குழுவில் இணைய நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவரது வாழ்த்து செய்தியில், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்! மொழி – தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது”! என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.







