தென்கொரியாவில் முனைவர் பட்டம் பெற்ற வாணியம்பாடி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் தென்கொரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 33 வயதான இவர் கோயம்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து பின்னர் மேற்படிப்புக்காக தென்கொரியா நாட்டுக்கு சென்றார். அங்கே அவர் முனைவர் பட்டம் பெற்று தற்போது கொரியாவிலேயே செயல்பட்டு வரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர் கடந்த மூன்று வருடங்களாக தென் கொரியா நாட்டில் உள்ள பூசான் மாகாணத்தை சேர்ந்த சேங்வான்முன் என்ற இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரும் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, தென் கொரியாவை சேர்ந்த சேங்வான்முன் குடும்பத்தினர் கடந்த வாரம் இந்தியா வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென் கொரியாவை சேர்ந்த இளம் பெண் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கும், உறவினர்கள் இந்து முறைப்படி திருமணம் நடத்தி வைத்தனர். திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமான கலந்து கொண்டு மணமகன் மற்றும் மணமகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.