மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மின்சாரத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை மாவட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் மற்றும் வருவாய்துறை, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
“டாஸ்மாக் மது விற்பனையை சீராக்குவது, பார் நேரம் குறித்தும், மனமகிழ்மன்றம் கண்காணிப்பு, குவாரிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் அனைத்து சட்ட விரோத குவாரிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய்க்கான தற்காலிக தீர்வு திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம். மாநகராட்சி வரி, முறைகேடு, ஊழல் குறித்து கணக்கீடு எடுத்து வருகின்றோம். நிலுவையில் உள்ள அனைத்து ஊழல் வழக்குகளும் விரைவில் முடிக்கப்படும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த மதவாத சக்தியும் தலையிட விடமாட்டோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள், இரண்டு வருடத்திற்கு முன்பு இருந்த சூழலே தொடரும்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு யாரையும் பார்த்து பயம் இல்லை. எவ்வளவோ மிரட்டிய திமுகவிற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பயப்படவில்லை, செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் எனும் பென்ச் மார்க் கிடையாது. முதலமைச்சராக இருக்கக்கூடியவர்கள் செய்தியாளர்களை சந்திப்பது கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக இருந்த ஒரு சிலர் தங்களுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக செய்தியாளர்களை சந்தித்து வந்தனர். ஊடகங்கள் எப்போது தேவையோ அப்போது தான் சந்திக்க வேண்டும்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் மக்களை சந்தித்து வருகிறார், மக்களை சந்தித்து பேச நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். முதலமைச்சர் ஊடகங்களை சந்திக்க வேண்டும் எனும் பெஞ்ச் மார்க் நீங்களே உருவாக்கிக் கொண்டது தான். தமிழக வெற்றி கழகத்தின் சார்பிலும் தமிழக அரசின் சார்பிலும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறோம். ஊடகங்களுக்கு கூற வேண்டியது முதலமைச்சர் செய்தி அறிக்கையாக அளித்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.




