தமிழ்நாட்டில் அதிமுக நடத்திய போராட்டத்தைப் பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவற்றைக் கண்டித்து, கடந்த இரு தினங்களாக மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் போராட்டம் என்பதால், போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் போது பேசிய, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்களில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம் எனவும், மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வைக் கண்டித்துத் தான் இந்த போராட்டம் நடத்தப்படுவதாகப் பேசினார். மேலும், தமிழ்நாட்டில் அதிமுக நடத்திய போராட்டத்தைப் பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவிற்கு மக்கள் செல்வாக்கை மறைக்கக் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டு வருவதாகவும், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு துன்பங்கள், வேதனைகள், பொய் வழக்குகளைச் சந்தித்த பிறகு தான் ஜெயலலிதா சாதனை படைத்தார் எனக் கூறினார். மேலும், தமிழ்நாடு முதன்மை மாநிலம் எனப் பேர் வாங்கி தரப் பாடுபட்டவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எனக் குறிப்பிட்ட அவர், கருணாநிதியாலேயே அதுமுடியவில்லை எனத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘‘தி லெஜண்ட்’: யுஎஸ்எ-வில் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியல் இதுதான்!’
அதிமுக என்றால் சாதாரணமாக நினைத்தீர்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், அதிமுக இயக்கத்திற்குக் கிடைத்த வலிமை தொண்டர்களால் கிடைத்தது எனவும், ஜெயலலிதா மறைவுக்கு அவர் முதலமைச்சரானதாகக் கூறினார். மேலும், அப்போது ஆட்சி பத்து நாட்களில் கவிழ்ந்துவிடும் என தற்போதைய முதலமைச்சர் விமர்சித்ததாகக் கூறிய அவர், விபத்திலே வந்தது இந்த திமுக ஆட்சி எனச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், உங்கள் ஆட்சி அதிகாரம் எதிர்க்கட்சியை அழிப்பதற்கு அல்ல, மக்களுக்கு நன்மை செய்வதற்கானது எனத் தெரிவித்தார். மேலும், நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக எனவும், வீட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக எனவும் சாடினார். அதிமுக ஆட்சியிலிருக்கும் போது மின் கட்டணத்தை உயர்த்தவில்லை மாறாக 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கினோம் எனத் தெரிவித்த அவர், திமுக அரசு ஈவு இரக்கமில்லாமல் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
மேலும், அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து கதவைக் காலால் உடைத்த சதிகாரர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும் எனக் கூறிய அவர், துரோகிகளுக்குப் பாடம் கற்பிப்போம் எனவும், திமுகவுடன் கைக்கூலியாக ஒரு சிலர் சேர்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அவர்கள் கூண்டோடு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், துரோகிகளை ஓட ஓட விரட்டுவோம் எனக் கூறினார்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் மேடையின் ஓரமாக அமரவைக்கப்பட்டார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.









