வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நாளை நடைபெறும், மண்டல மாநாட்டில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27, 2026) சென்னைக்கு வருகை தந்து, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள “தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் (ELC) மற்றும் ECINET” குறித்த மண்டல மாநாட்டிற்குத் தலைமை தாங்கி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLOs) நேரடிக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் (CEO) ஒருங்கிணைந்து “ஜனநாயகத்தைக் கற்போம், ஜனநாயகத்தை வழிநடத்துவோம்” (“Learn Democracy, Lead Democracy”) என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்த முன்னெடுப்பானது, வாக்காளர் விழிப்புணர்வை வலுப்படுத்துதல், வருங்கால வாக்காளர்களிடையே அரசியலமைப்பு விழிப்புணர்வை வளர்த்தல் மற்றும் தேர்தல் பணிகளுக்கு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாள் முழுவதும் நடைபெறும் இந்நிகழ்வில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, தலைமை இயக்குநர் (ஊடகம்) ஆஷிஷ் கோயல் மற்றும் தலைமை இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்) சீமா கண்ணா உள்ளிட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்கின்றனர்.

இம்மாநாட்டில் தமிழ்நாடு (~900 பிரதிநிதிகள்) மற்றும் புதுச்சேரியைச் (~100 பிரதிநிதிகள்) சேர்ந்த 300 பள்ளிகள், 75 கல்லூரிகள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் என சுமார் 1,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் துணை மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் துறைசார் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலர்களும் இதில் பங்கேற்பர். ஆகஸ்ட் 27, காலை அமர்வில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சுமார் 500 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடி, கள அளவிலான வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் களப்பணி சார்ந்த கருத்துக்களைக் கேட்டறிவார்.

மதிய அமர்வில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஜனநாயகப் பங்களிப்பு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றி, அதைத் தொடர்ந்து நடைபெறும் கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்பார். மேலும், இம்மாநாட்டில் வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளின் நேரடிச் செயல்விளக்கங்கள், கலந்துரையாடல் கண்காட்சிப் பலகைகள், தேர்தல் வினாடி வினாக்கள் மற்றும் ELC 2.0, ஒருங்கிணைந்த ECINet செயலி போன்ற தொழில்நுட்பத் தளங்களின் பயன்பாடுகளும் இடம்பெறும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.