“நேபாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்க நடவடிக்கை தேவை” – அன்புமணி!

நேபாள அரசுக்கு தேவையான மீட்பு மற்றும் பிற மனிதநேய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டின் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 57 பேர் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன.

வெள்ளத்தில் சிக்கியவர்களில் 57 பேர் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் ஆவர். அவர்களில் 22 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

நேபாள அரசுடன் தொடர்பு கொண்டு, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியவர்களையும் அவர்களில் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் நேபாள அரசுக்கு தேவையான மீட்பு மற்றும் பிற மனிதநேய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.