செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் போர் காரணமாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து இந்த போட்டியை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சிகளில் ஈடுபட்டன. இந்திய செஸ் கூட்டமைப்பு இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த வேண்டும் என முன்னெடுத்த முயற்சியின் காரணமாக அந்த வாய்ப்பு நமது நாட்டிற்கு கிடைத்துள்ளது.
188 நாடுகளிலிருந்து சுமார் 2500 வீரர்கள் கலந்து கொள்ளும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு மற்ற மாநிலங்கள் தயங்கிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த போட்டிய எடுத்து நடத்திட விரும்புகிறது என்று துணிச்சலாக முடிவெடுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி தமிழ்கத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்காக தமிழக அரசு ரூ.100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவு முதல் தங்குமிடம் வரை அனைத்து விஷயங்களையும் நேரடியாக கண்காணித்து உரிய உத்தரவுகளை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வழங்கி வருகிறார். தமிழக அரசின் இந்த முயற்சிகளை காங்கிரஸ் பாராட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல், அக்னிபாத் திட்டம், முறையற்ற ஜிஎஸ்டி வரி அமல், கூட்டாட்சி தத்துவம் சிதைப்பு, தன்னாட்சி பெற்ற அமலாக்கத்துறை, சிபிஐ, மத்திய வருமான வரித்துறையை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்துவது, நீட் தேர்வு விலக்கு மறுப்பு, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தால் அவர்களை சஸ்பெண்ட் செய்வது போன்ற மக்கள் விரோத மற்றும், ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு துணை போகின்ற மத்திய அரசை கண்டித்தும், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்தும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த புறக்கணிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமான அரசை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிரானது தானே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானது அல்ல என்றும் தரிவித்துள்ளார்.







