அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி – அரசு ஆலோசனை

நாட்டின் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் “Azadi Ka Amrit Mahotsav” ஒரு அங்கமாக அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி “Har Ghar Tiranga” என்ற நிகழ்ச்சியினை வரும் ஆகஸ்ட் 13 மற்றும்…

நாட்டின் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் “Azadi Ka Amrit Mahotsav” ஒரு அங்கமாக அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி “Har Ghar Tiranga” என்ற நிகழ்ச்சியினை வரும் ஆகஸ்ட் 13 மற்றும் 14, 15 ஆகிய நாட்களில் கொண்டாடுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

 

தமிழ்நாடு மக்களின் நாட்டுப்பற்றை பறைசாற்றும் விதமாக, தமிழகமெங்கும் இந்த நாட்களில் தேசியக் கொடியினை ஏற்றுவதற்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சென்னையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

தமிழகமெங்கும் நாட்டுப்பற்றினை பறைசாற்றும் விதமாக அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி நிகழ்ச்சியினை பொதுமக்கள் பங்களிப்புடன் கொண்டாடப்படும் வகையில், தேவையான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மைச் செயலாளர் விளக்கி கூறினார்.

தமிழகமெங்கும் ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் தமிழகத்தில் அனைத்து வீடுகள், அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், அனைத்து கல்வி நிறுவனங்கள், காவல் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள், அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுரைகளை வழங்கினார்.

 

மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறு, குறு நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மூலம் தேசியக் கொடிகள் தயாரிக்கவும், அனைத்து மக்களுக்கும் தேசியக் கொடிகள் எளிதாகக் கிடைப்பதற்கும், உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அமைப்புகள், நியாய விலைக் கடைகள், கூட்டுறவு அமைப்புகள் போன்றவை வழியாக விநியோகிக்கவும், அனைத்து இடங்களிலும் இந்நாட்களில் தேசியக் கொடியேற்ற பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. தேசியக்கொடியை ஏற்றுவதுடன் http://www.harghartiranga.com என்ற வலைதளத்தில் பொதுமக்கள் தேசியக் கொடியுடன் செல்பி (Selfie) எடுத்து பதிவேற்றம் செய்யலாம் என்றும் அரசு முடிவெடுத்துள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.