போலி பாஸ்போர்ட் வழக்கு – பாஜக அண்ணாமலையை பாராட்டிய நீதிபதி

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற வழக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.   மதுரையில் இலங்கையைச் சேர்ந்த சிலர் 2019-ம் ஆண்டு செப்டம்பர்…

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற வழக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

 

மதுரையில் இலங்கையைச் சேர்ந்த சிலர் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பாஸ்போர்ட் பெற்று, வெளிநாடு செல்ல முயற்சி செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின்படி, அவ்வாண்டு செப்டம்பர் 27-ம் தேதி மதுரை நகர க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினர் பாஸ்போர்ட் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் பெற்ற 7 பேர், 13 பயண முகவர்கள், 5 காவல் துறை அலுவலர்கள், 14 மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், 2 அஞ்சல்துறை அலுவலர்கள் உட்பட மொத்தம் 41 பேர் குற்றம் புரிந்துள்ளதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சுரேஷ்குமால்ர என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் இதனை விசாரணைக்கு எடுத்து கொண்டார்.

வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த அவர், பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என்றார். ஆகவே, பாஸ்போர்ட் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர் என தெரிவித்தார்.

 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என்றார். அவர் ஜனநாயகத்தின் காவலர் (watch dog of democracy). அவர் இல்லையெனில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது என நீதிபதி தெரிவித்தார்.

 

மனுதாரர் மீது எவ்வித குற்றமும் இல்லை என ஒரு கியூ பிரிவு காவல்துறையினர் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. மனுதாரருக்கான நிவாரணம் வழங்கப்பட்டாலும், இந்த வழக்கு தேசத்தின் பாதுகாப்பு தொடர்பானது. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது குற்றமில்லை என்பது உறுதி ஆனதால் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட்டது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.