சென்னை டு குமரி – அன்புமணியின் மெகா பிளான்

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ்  மாற்று சிந்தனை மூலம் மக்களை திரட்ட திட்டமிட்டு வருகிறார். இதற்காக அவர் சென்னை டு குமரி என்ற திட்டத்தின் முதற்படியாக பசுமைத் தாயகம்…

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ்  மாற்று சிந்தனை மூலம் மக்களை திரட்ட திட்டமிட்டு வருகிறார். இதற்காக அவர் சென்னை டு குமரி என்ற திட்டத்தின் முதற்படியாக பசுமைத் தாயகம் சார்பில், ‘சென்னை தூய காற்றுச் செயல் திட்டம்’ வரைவு அறிக்கையை நாளை வெளியிடுகிறார்.

இதற்கும் அவரது அரசியல் வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு என பாமக வட்டாரங்களில் விசாரித்தபோது, கடந்த 2014ஆம் ஆண்டு நாம் விரும்பும் சென்னை என்ற வரைவு திட்டம் பாமக சார்பில் வெளியிடப்பட்டது. இது சென்னைவாசிகளின் ஒவ்வொருவரின் அடிப்படை பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் இடம் பெற்றிருந்தன. கழிவு மேலாண்மை, மின் பகிர்வு திட்டங்கள், தூய்மை நகரம் போன்றவை அதில் அலசி ஆராயப்பட்டது. அப்போது அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனுடைய தொடர்ச்சியாக  பசுமை தாயகம் சார்பில் நாளை ‘சென்னை தூய காற்றுச் செயல் திட்டம்’ வரைவு வெளியிடப்படுகிறது என பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தூய காற்று இல்லாமல் மக்கள் எப்படி அவதிப்படுகிறார்கள் என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாம். சர்வதேச அளவில் 90 லட்சம் மக்கள் தூய காற்று கிடைக்காமல் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதில் 27 லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் நான்கில் ஒரு பங்கு சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.

குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல், நுரையீரல் கேன்சர் வருவதற்கு மிக முக்கிய காரணம் தூய காற்று கிடைக்காமல் இருப்பதுதான் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். தோல் நோய்கள் வருவதற்கும் அசுத்த காற்று முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி மக்களை அவதிக்குள்ளாக்கி வரும் இப்பிரச்சனையை பசுமை தாயகம் வழியாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி மக்களிடையே எடுத்து செல்லவுள்ளாராம். மேலும், இப்பிரச்சனையில் இருந்து மக்கள், தங்களை எப்படி பாதுகாப்பது என்ற விடயத்தை மிகப்பெரும் பரப்புரையாக சென்னை முழுவதும் எடுத்து செல்லவுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

இதேபோல் ஒவ்வொரு மண்டல வாரியாக மக்களை பாதிக்கும் விஷயங்களையும் விரைவில் பாட்டாளி மக்கள் கட்சி பெரும் பரப்புரையாக கொண்டுச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பரப்புரைகள் மூலம் சென்னை டு குமரி வரை தாங்கள்தான் மாற்றுச் சிந்தனையுடைய கட்சி என்பதை பாமக கொண்டுச் செல்லும் எனத் தெரிகிறது.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.