சென்னை சாலிகிராமம் பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மழை நின்ற பின்னரும் கூட வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழில் இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை சாலிகிராமம் ஏ.கே.பாபு தெரு பொதுமக்கள் கூறுகையில், “தொடர் மழை நின்ற பின்னரும் மழை நீர் வடியவில்லை. இதன் காரணமாக கழிவு நீருடன் சேர்ந்து இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மட்டுமல்லாது, எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தெருக்களில் தேங்கியுள்ளதால் பணிக்கு சென்று வருவதில் பெரும் சிரமம் நீடிக்கிறது.
கொசு மற்றும், சுகாதாரமற்ற நீர் காரணமாக வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால்களை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம்.” என பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.








