குற்றங்களே நடக்காத வகையில் ஒரு சூழலை உருவாக்கும் துறையாக காவல்துறை உருவாக வேண்டும் என்றும், காவல்துறை மீது யாரும் குற்றம் சுமத்தாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு – மீட்ப்புபணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிர்வாகம் மற்றும் காவல்துறை சரியாக செயல்பட்டால் அரசு சரியாக இருக்கும் என்றும், குற்றங்களே நடக்காத வகையில் ஒரு சூழலை உருவாக்கும் துறையாக காவல்துறை உருவாக வேண்டும் என்றும் கூறினார். காவல்துறை மீது யாரும் குற்றம் சுமத்தாதபடி, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு பணியை செய்ய வேண்டும். ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்று பாராமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்றும், திட்டமிட்டு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் மோதல்களை உருவாக்க நினைப்போரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதோடு, தமிழ்நாட்டில் எந்த ஒரு போதைப்பொருள் நடமாட்டமும் இருக்காத வகையில் கூலிப்படையினர் துடைத்தெறியப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். மதம், சாதி, தீவிரவாத நிகழ்வுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும், இணையதளங்களில் வன்முறை, மோதல்களை தூண்டும் நபர்களைத் தடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 3 புதிய அறிவிப்புகளை தற்போது பார்க்கலாம்..
1) இரவுப் பணிக்கு செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இரவுநேர ரோந்துப் பணிக்கு செல்லும் அனைத்து காவலர்கள் மற்றும் ஆய்வாளர் அளவில் உள்ள அதிகாரிகளுக்கு மாதம் ரூபாய் 300 வழங்கப்படும்.
2) காவலர்களுக்கு வாரம் விடுமுறை அளிக்கப் படுவது போன்று உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை விடுமுறை அளிக்கப்படும்
3) இணையவழி சூதாட்டத்தில் பங்கேற்று தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நபர்களின் காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும்.
நியூஸ் 7 தமிழ் இணைய செய்தி பிரிவில் உடனுக்குடன் செய்திகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்..