விதிமுறைகளை மீறி அதிக மக்களை அனுமதிக்கும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. அதன்பிறகு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் வெளியாகின. அதனால் ரசிகர்கள் மீண்டும் திரையரங்கை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி என்ற விதிமுறைகளை மீறும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரத்தில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
திருநங்கைகள் 30 பேருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தாண்டு தினத்தன்று கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், காணும் பொங்கல் தினத்திலும் தொடரும் எனக்கூறினார். யூடியூப் சேனல் என்கிற பெயரில் ஆபாச பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.







