19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ஷ் மறும் இங்லிஸ் அதிரடி துவக்கம் கொடுத்தனர். பவர்பிளே முடிவில் லக்னோ விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய இங்லிஸ் 23 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து லக்னோ 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 96(57) ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் யஷ் ராஜ் புஞ்ஜா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதனையடுத்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்-சூர்யவன்ஷி களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இறுதியாக ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.







