சென்னை | ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை – காவல்துறை உடனடி நடவடிக்கை!

சென்னை ஐ.ஐ.டி-யில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மற்றொரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் ஐஐடி மெட்ராஸ் மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் டீ குடிப்பதற்காக கோட்டூர்புரத்தில் உள்ள பேக்கரியுடன் இணைந்த டீ கடைக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அதே கடையில் வேலை பார்க்கும் ஸ்ரீராம் (29) என்கிற உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவி உடன் வந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்த பொது மக்கள் அந்த நபரை பிடித்து வைத்தனர். பின்பு அவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த காவல் துறையினர் பேக்கரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் பின்பு காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் வைத்தனர்.

ஐஐடி மெட்ராஸ் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மாணவர்கள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருக்கவும் கல்லூரி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.