கொரானா நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாயை மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை கோரிய மனுவுக்கு, தமிழ் நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நிவாரண உதவியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4,000 ரூபாய் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், மத்திய – மாநில அரசு ஊழியர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க தடை விதிக்க கோரி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், உணவுப் பொருள் வழங்கல் துறையின் புள்ளி விவரங்கள் படி, மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 496 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அனைத்து வகையான பொருட்களும் பெறும் 1 கோடியே 84 லட்சத்து 11 ஆயிரத்து 633 அட்டைகளும் 18 லட்சத்து 31 ஆயிரத்து 838 வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குடும்ப அட்டைகளும் 3 லட்சத்து 84 ஆயிரத்து 626 சர்க்கரை குடும்ப அட்டைகளும் 53 ஆயிரத்து 864 எந்த பொருளும் வேண்டாம் என்று பெற்ற குடும்ப அட்டைகளும் 59 ஆயிரத்து 248 காவல் துறை குடும்ப அட்டைகளும் உள்ளன.
தற்போது அரிசி வாங்கும் குடும்ப அட்டை வைத்து இருக்கும் 2 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 4,153 கோடியே 69 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் முறையாக எவ்வித சம்பள குறைப்பும் இன்றி சம்பளம் வழங்கப்படுகிறது.
அதன் காரணமாக கொரானா நிவாரண உதவி 4 ஆயிரம் ரூபாயை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆர்.சுப்பையா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், நிதியுதவி வழங்கும் திட்டம் பெரும்பாலும் முடிந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.







