கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் இது தொடர்பான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி விஸ்வலிங்க சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தமிழ்நாடு முழுவதும் 95 சதவிகித கூட்டுறவு சங்கங்களுக்கு முறையான தேர்தல் நடத்தாமல் அதிமுக நிர்வாகிகளே தன்னிச்சையாக தேர்வு செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார்.
கூட்டுறவு சங்கங்களில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.







