சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு நடத்தினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய் சேவைகளைப் பெற வந்த பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் சென்னை மாவட்ட ஆட்சியரான விஜயராணி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கூட்டுறவு, உணவுத் துறை இணைச் செயலாளராக இருந்த அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விஜயராணிக்கான பொறுப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. முதலமைச்சர் ஆய்வு செய்த சில மணி நேரங்களிலேயே அதுவும் பிரதமர் நாளை சென்னை வரவுள்ள நிலையில், ஆட்சியர் மாற்றம் நிகழ்ந்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.







