அண்ணா சாலை கட்டட விபத்தில் இளம்பெண் பத்மப் ப்ரியா உயிரிழந்தது தொடர்பாக புதிதாக மேலும் ஒருவரை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கடந்த 27-ஆம் தேதி பழைய கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, பத்மபிரியா என்ற ஐடி ஊழியர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய பத்மபிரியாவை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பத்ம பிரியாவின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றைய தினம் அவரது உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடந்த 27-ஆம் தேதி அன்றே, இடிப்பு பணிகளை மேற்கொண்டு இருந்த ஜேசிபியின் உரிமையாளரான ராமநாதபுரத்தை சேர்ந்த ஞானசேகரன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜேசிபியை இயக்கிய டிரைவர் பாலாஜி ஆகிய இருவரையும் ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் கட்டிடத்தின் உரிமையாளர் சையது அலி பாத்திமாவின் சிறிய மாமனார் ஜாகிர் உசேன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட காண்ட்ராக்டர் அப்துல் ரகுமான் என்பவரையும் ஆயிரம் விளக்கு போலீசார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். இதுவரை இந்த சம்பவத்தில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கட்டட உரிமையாளர் சையது அலி பாத்திமா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பி. ஜேம்ஸ் லிசா









