தூத்துக்குடி அருகே உறவினரை ஏமாற்றி நகைகளை திருடிய நபருக்கு, அவரது நண்பரே துரோகம் இழைக்க, தற்போது அவர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சல்லி செட்டிபட்டி கிராமத்தில் ராதா-செல்ல பாண்டியன் தம்பதியினருக்கு சொந்தமான வீட்டில், கடந்த 20ம் தேதி பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள் மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் மாயமானது. இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பீரோ சாவி இருக்கும் இடம் உறவினர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால் வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை என ராதா-செல்ல பாண்டியன் தம்பதியினர் போலீசாரிடம் உறுதிபட தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான், அவர்களது உறவினரான மணிகண்டன் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, தான் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மதுரைக்குச் சென்றுள்ளார். மணிகண்டனை ஃபோனில் அழைத்த போது அவர் விசாரணைக்கு வர மறுத்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மணிகண்டன் தன் நண்பர் வசந்தகுமாருடன் இணைந்து நகைகளை திருடி, ஊரில் உள்ள கோயில் அருகே நகைகளை புதைத்து வைத்துள்ளார். பின் நகையை எடுத்துக் கொண்டு மதுரை சென்றுள்ளார். திருடிய 3 லட்ச ரூபாய் பணத்தை வைத்துக்கொண்டு மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருவரும் மது அருந்தியபடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், தேனியைச் சேர்ந்த தனது நண்பர் பிரபாகரனை தொடர்பு கொண்டு மணிகண்டன் நகையை விற்பதற்கு உதவி கேட்க, தான் நேரடியாக வருவதாகவும், நகையை விற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார் பிரபாகரன்.
இதற்கிடையில், மணிகண்டன் தனது அண்ணனிடம் தான் ஒரு பெண்ணை
காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறிவிட்டு, காதலியுடன் உதகைக்கு சுற்றுலா சென்று அங்கு நான்கு நாட்களாக தங்கி இருந்துள்ளார். பிரபாகரன் வருவதற்குள் மனம் மாறிய மணிகண்டன் நகையை விற்காமல், உறவினரிடமே கொடுத்து விடலாம் என முடிவெடுத்துள்ளார். ஆனால், பிரபாகரனோ விருதுநகரில் இருந்து காரை வரவழைத்துவிட்டு, முதலில் நாம் மூவரும் கோவா சென்று என்ஜாய் செய்யலாம் என்றும். மற்ற விஷயங்களை பிறகு பேசிக்கொள்ளலாம் என்றும் கூறி உள்ளார். இதையடுத்து, மூவரும் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
கோவாவிலிருந்து மதுரை திரும்பியதும் மனம் மாறிய மணிகண்டன், வசந்தகுமார் மற்றும் பிரபாகரன் இருவருடனும் சேர்ந்து மது அருந்தியுள்ளார். மணிகண்டனும் வசந்தகுமாரும் போதையில் மயங்கி கிடந்தபோது, பிரபாகரன் அவர்கள் வைத்திருந்த நகைகளுடன் மாயமானார். இதனிடையே, மணிகண்டன் மீதான சந்தேகம் வலுக்கவே அவரையும் வசந்தகுமாரையும் போலீசார் மதுரையில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய பிரபாகரனை போலீசார் தேடி வருகின்றனர்.







