நிலவில் சந்திரயான் லேண்டர் கலன் தரையிறங்கும்போது 2.06 டன் மண் துகள்கள் மேலெழும்பி 108.4 மீட்டா் பரப்பளவுக்கு பிரகாசமான தரைப்பரப்பு (எஜெக்டா ஹாலோ) உருவானதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் இறங்கி 14 நாட்கள் ஆராய்ச்சி செய்தது. தொடர்ந்து நிலவில் இருள் சூழும் காலத்தில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி விழத் தொடங்கியதையடுத்து உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை, மீண்டும் விழித்தெழ வைப்பதற்கான பணிகள் நடைப்பெற்றன.
மொத்தம் 14 நாள்கள் லேண்டரும், ரோவரும் நிலவின் மேற்பரப்பையும், ரசாயனத் தன்மைகளையும் ஆய்வு செய்து பல்வேறு அரிய தகவல்களைத் திரட்டின. இந்நிலையில் லேண்டரை தரையிறக்கும்போது நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் இஸ்ரோ பதிவிட்ட தகவல்:
https://twitter.com/isro/status/1717797476403646918
”பொதுவாக விண்கலனை நிலவில் தரையிறக்கும்போது மேற்பரப்பில் உள்ள மண், துகள்கள் புழுதிபோன்று மேலெழுவது இயல்பு. அந்த வகையில், சந்திரயான் லேண்டா் கலன் இறங்கும்போதும் 2.06 டன் மண் மற்றும் ரசாயனத் துகள்கள் வெளியேறி 108.4 மீட்டா் பரப்பளவுக்கு தெளிவான தரைப்பரப்பு உருவானது” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளது இஸ்ரோ.







