முக்கியச் செய்திகள் இந்தியா

கைக்குழந்தையுடன் பணியில் பெண் காவலர் பெருமைப்படவேண்டிய விஷயமா?


எழுத்து - எல். ரேணுகாதேவி

கட்டுரையாளர்

சண்டிகரில் பிரியங்கா என்ற போக்குவரத்து காவலர் தனது கைக் குழந்தையுடன் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

பெண் காவலரின் இந்த செயலை பலர் பெருமையாகப் போற்றிவரும் அதேநேரத்தில் இது பெருமைப்படவேண்டிய விஷயமல்ல பெண் காவலர் இந்நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்த சிந்திக்கவேண்டிய நேரம் என்ற கருத்துகளும் எழுந்துள்ளது.

10 லட்சம்பேர் பார்த்த வீடியோ

சண்டிகரில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார் பிரியங்கா. இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார் அவர். குழந்தையைக் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுவிட்டு பணிக்கு வந்துள்ளார். ஆனால் குழந்தை பசியால் அழுதாலோ, வேறு காரணத்துக்காக அழும்போதெல்லாம் அவருடைய கணவர், குடும்பத்தார் குழந்தையை தூக்கிக்கொண்டு பிரியங்காவிடம் கொடுத்து தாய் பாலூட்டவும் சமாதானம் செய்வதையும் வழக்கமாகக்கொண்டுள்ளனர்.

குழந்தை கவனித்துக்கொள்வதால் பிரியங்கா சரியான நேரத்திற்கு பணிக்கு வரமுடியாமல் போயுள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பிரியங்கா காலை 8 மணி பணிக்கு வரும்படி உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அவர் காலை 11 மணிக்கு தன்னுடைய கைக்குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது அந்த பக்கமாகச் சென்ற ஒருவர் கைக்குழந்தையுடன் பிரியங்கா பணியில் ஈடுபட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டது. சுமார் பத்து லட்சம் பேர் பிரியங்கா கைக்குழந்தையுடன் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியைப் பார்த்துள்ளனர்.

கேள்வி எழுந்ததால் விசாரணை


பலர் பிரியங்காவின் இந்த செயலை போற்றியும் பெண் சமூகத்தை பெருமைத்தரும் நிகழ்வு என்றும் புகழ்ந்து கருத்துகளைப் பதிவிட்டனர். அதேநேரம் சிலர் கை குழந்தையுடன் பணியாற்றும் வகையில் அக்காவலர் ஏன் பணிக்கப்பட்டார்? கைக் குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண் காவலருக்கு ஏன் சாலைகளில் பணி ஒதுக்கப்படுகிறது? அவர்களுக்கு அலுவலக பணியை ஒதுக்கியிருக்கலாமே? அங்கேயே குழந்தைகள் பராமரிப்பு மையம் இருப்பதை உத்தரவாதம் செய்திருக்க வேண்டாமா? அப்போதுதான் அக்குழந்தைக்குப் பாலூட்டும் நேரத்தில் அப்பெண் காவலர் அருகில் இருக்க முடியும்? என்கிற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு போன்ற பல சட்டங்கள் இருந்தாலும் உண்மை எதார்த்தம் அப்படியாக இல்லை என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

இத்தகைய கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது இச்சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் காலை எட்டு மணிக்கு பணிக்கு வராமல் ஏன் பிரியங்கா குழந்தையுடன் 11 மணிக்கு அப்பணியில் இருந்தார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

‘உபெர்’ வள்ளிக்கும் இதே நிலை

கடந்த ஆண்டு சென்னையில் உபெர் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வள்ளி என்ற பெண் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையுடன் ஈடுபட்டார். உணவு டெலிவரி செய்யும் இடங்களுக்குக் குழந்தையை தன்னுடைய அழைத்துச் சென்ற நிகழ்வும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.

தமிழகத்திலும் பாதுகாப்புப் பணிக்காகப் பெண் காவலர்கள் சாலை ஓரங்களில் பல மணிநேரம் நிறுத்தப்படுகின்றனர். அவர்கள் அவசரத்திற்குச் சிறுநீர் கழிக்கக்கூட வழியின்றி அவதிப்படுகின்றனர். இவற்றை எல்லாம் ஒரு நாகரீக சமூகம் கருத்தில் கொள்ளவேண்டாமா?

இந்த வலிகளைக் கடந்து பணியாற்றும் பெண்களைப் பாராட்டுவதோடு எதுவும் முடிந்துபோவதில்லை. அது அவர்களின் வலிகளை அப்படியே நீட்டிக்கவே வழி செய்கிறது. வலிகளோடு பணியாற்றும் சூழலை மாற்றுவதற்குக் குரல் கொடுப்பதே அவசிய அவசர தேவையாகும்.

எழுத்து – எல். ரேணுகாதேவி

Advertisement:

Related posts

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் இதுதான்: அமைச்சர் விளக்கம்!

Hamsa

மேட்டூர் அணை 12-ல் திறப்பு: முதல்வர் உத்தரவு

Karthick

நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!

Karthick