வறண்ட பூமியில் இனி என்ன வேலை செய்வது எனத் துவண்டுவிடாமல் நம்பிக்கை எனும் கீற்றால் இன்று உலகம் முழுவதும் வெற்றி நடைபோடுகிறார்கள் ஆந்திராவில் உள்ள பாலக்குட்டப்பள்ளி மகளிர் சுயஉதவிக் குழுவினர்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது பாலக்குட்டப்பள்ளி கிராமம். வறட்சியால் வறண்டப்போன பூமியில் இனி என்ன செய்து எனத் தெரியாமல் ஆண்கள் எல்லாம் வெளியூர்களுக்கு வேலை தேடிச் செல்ல, கிராமத்தில் உள்ள பெண்களே தங்களுக்குத் தெரிந்த சிறு வேலைகள் செய்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவந்தனர். ஆனால் அவர்களுக்குக் கிடைத்த வருமானம் என்னவோ சொற்பம்தான்.
கைகொடுத்த தையல் தொழில்
இந்நிலையில் இந்த கிராம பெண்களுக்கு உதவும் நோக்கில் இதே கிராமத்தில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளரான அபர்ணா கிருஷ்ணன் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் பெண்களுக்கு உதவு முன்வந்தார். இதற்கு அவர் தேர்ந்தெடுத்த தொழில்தான் தையல்.

“கிராமங்களில் வசித்துவரும் இந்த பெண்கள் தொடக்கத்தில் ஊறுகாய் விற்றுதான் சிறு வருமானம் ஈட்டிவந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் அப்பெண்கள் விற்பனைச் செய்யும் ஊறுகாயை எனக்குத் தெரிந்தவர்களிடம் விற்பனைச் செய்து கொடுத்தேன். பின்னர் இவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என யோசித்த போதுதான் தையல் தொழில் கைகொடுத்தது. அப்போது இந்த கிராமத்தில் ஒருவரிடம் மட்டும்தான் தையல் இயந்திரம் இருந்தது. சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகளை தயாரிப்பதைத்தான் எங்களுடைய நோக்கமாக வைத்துக்கொண்டோம். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த கிராம பெண்களுடைய உழைப்பால் பலவகையான துணிப்பைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்” என்கிறார் அபர்ணா.
உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை
அபர்ணாவின் முயற்சியால் 2017-ம் ஆண்டு நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச இயற்கை மாநாட்டிற்காக பாலக்குட்டப்பள்ளிச் சேர்ந்த பெண்கள் குழுவுக்கு 1,700 பைகளுக்கான ஆர்டர் கிடைத்தது. அதன்மூலம் இவர்கள் 5 லட்ச ரூபாய் லாபம் ஈட்டினர். இதனையடுத்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவா கைத்தறி கண்காட்சிக்கும் பைகளைத் தயாரித்தனர்.

இந்த கிராம பெண்கள் தற்போது தங்களது துணிப்பைகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இந்த கிராமத்தின் பெயரியேல ‘பாலகுட்டப்பள்ளி பைகள்’ ‘http://paalaguttapalle.com/’ என்ற இணையப் பக்கத்தை நடத்திவருகிறார் அபர்ணா.
ஒரே பையில் 5 நன்மைகள்
இந்த துணிப்பைகள் ரூ.75 முதல் ரூ.3 ஆயிரம் பல வண்ணங்களிலும் வகைகளிலும் விற்பனைச் செய்யப்படுகிறது. பாட்டிகள் பயன்படுத்தும் சுருக்குப் பைகள் முதல் பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் புத்தக பை, மளிகை பைகள், மாநாடு பைகள், லோகோக்களுடன்கூடிய பைகள், உணவு பை, நகைகள் வைக்க உதவும் பைகள், ஃபேன்சி பரிசுப்பைகள் எனப் பல வகையான துணிப் பைகளை இவர்கள் தயாரித்து விற்பனைச் செய்கிறார்கள்.

குறிப்பாகக் காய்கறிகளைக் கொண்டு செல்ல இவர்கள் தயாரித்துள்ள துணிப் பையில் ஒவ்வொரு காய்களையும் தனித்தனியாக வைத்துக்கொள்ள ஒரே பையில் ஐந்து தனித்தனி அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை மேம்பட வங்கிகள் உதவவேண்டும்
‘பாலக்குட்டுப்பள்ளி பைகள்’ தயாரிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து பெண்கள் வீட்டிலும் தற்போது தையல் இயந்திரம் உள்ளது. துணிகளை அலுவலகத்திலிருந்து எடுத்தச்செல்லும் பெண்கள் அதனை தங்களுடைய வீடுகளில் தைக்கிறார்கள். பாலக்குட்டுப்பள்ளி பெண்கள் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆர்கானிக் பண்ணைக்கு மிகப்பெரிய ஆர்டரை அனுப்பியுள்ளனர்.

“பாலக்கட்டுப்பள்ளி பைகளைப் பிரபலமாக்க விரும்புகிறோம். இதற்கு உயர்தரமான, கண்கவரும் வகையிலான பைகளை நாங்கள் உருவாக்கவேண்டும். தேவையான உபகரணங்களை வாங்குவதற்குக் கடன் வழங்கக்கோரி வங்கிகளை அணுகி வருகிறோம்,” என்கிறார் அபர்ணா கிருஷ்ணன்.







