தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில்…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று முதல் 26ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

22.11.2022: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் `சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.