வீட்டை இடித்து மக்களை தாக்கி, அரிசி மற்றும் உணவு பொருட்களை சாப்பிடும் மேக்னா யானையை பிடிக்கும் தீவிர முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி ஆகிய வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவு நேரங்களில் மட்டும் கிராமப்புற பகுதிகளில் நுழைந்து வீடுகளில் உள்ள அரிசி மற்றும் உணவு பொருட்களை சாப்பிட்டு வந்த அரிசி ராஜா எனப்படும் தந்தம் இல்லாத ஆண் மேக்னா காட்டு யானை கடந்த மூன்று நாட்களுக்கு முன் அரிசி சாப்பிடுவதற்காக பாப்பாத்தி என்பவரின் வீட்டை இடித்து அவரை தாக்கிக் கொன்றது.
அத்துடன் வீட்டில் இருந்த இருவரையும் தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து வீடுகளை சேதப்படுத்தி வரும் மேக்னா யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினரால் முடிவு செய்யப்பட்டு நேற்று முதன்மை வனப்பாதுகாவலர் யானையை பிடிக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக வெங்கடேஷ் உத்தரவின் பேரில் கூடலூர் வனக்கோட்ட வன அலுவலர் தலைமையில் மூன்று வனச்சரகர்கள், ஆறு உதவி வனச்சரகர்கள், இரண்டு கால்நடை மருத்துவ குழுவினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை விரட்டும் குழுவினர் என முதுமலையில் உள்ள கும்கி பயிற்சி பெற்ற இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் மேக்னா என்ற யானையை பிடிக்கும் பணி துவங்கியது.
இந்நிலையில் தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் மற்றொரு மேக்னா யானையுடன் யானை ஒன்றாக சுற்றி திரிவதால் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மேக்னா காட்டு யானையை எவ்வாறு கண்டறிந்து பிடிப்பது என்பது குறித்த பயிற்சியை ஆப்ரேஷன் மேக்னா யானை பிடிக்கும் குழுவினருக்கு நாடுகாணி ஜீன்பூல் வன அலுவலகத்தில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமையில் வழங்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது மேக்னா யானை தமிழ்நாடு, கேரளா வன எல்லையில் மற்றொரு மேக்னா யானையுடன் சுற்றி திரிவதால் அதனை கண்டறிந்து அதை பிடிப்பதற்கான முயற்சி மேற்க் கொள்ளப்படும். யானையின் தன்மை தொடர்ந்து கண்டறியப்பட்டுள்ளதால் யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்தார்.







