முக்கியச் செய்திகள் உலகம்

தமிழர் பகுதியில் தஞ்சமடைந்த மகிந்த ராஜபக்ச

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, கொழும்பில் இருந்து தப்பி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலை பகுதியில் தஞ்சமடைந்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சவின் ஊழல், அராஜகம், குடும்ப அரசியல் போன்றவையே காரணம் என கருதும் அந்நாட்டு மக்கள், அவரும் அவரது குடும்பத்தினரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, அமைச்சர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவும், மகன் நாமல் ராஜபக்சவும் கடந்த மாதம் 3ம் தேதி பதவி விலகினர்.

எனினும், பிரதர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சவும், அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சவும் விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, தலைநகர் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகமான அலரி மாளிகை முன்பாக கூடாரம் அமைத்து மக்கள் தன்னெழுச்சியாக தொடர்ந்து போராடி வந்தனர்.

இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துவருவதை அடுத்து, எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தேசிய அரசு அமைக்க மகிந்த ராஜபக்சவும், கோத்தபய ராஜபக்சவும் முயன்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் சம்மதிக்காததால், அடுத்து என்ன செய்வது என்பது தெரியாத நிலையில் அவர்கள் தவித்து வந்தனர்.

இந்நிலையில், தனது பிரதமர் பதவியை மகிந்த நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் அதிபருக்கு அனுப்பிவைத்தார்.

இதையடுத்து, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் மூலம் கொழும்பு வந்த மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதன் எதிரொலியாக, போராட்டக்காரர்கள் ராஜபக்சவின் பாரம்பரிய வீடு உள்பட பல்வேறு இடங்களை தீயிட்டு கொளுத்தினர். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களின் வீடுகள் என மொத்தம் 35 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் கோபம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், கொழும்பில் இருப்பது பாதுகாப்பானதாக இருக்காது என கருதி, அங்கிருந்து தப்பி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலை பகுதிக்கு ராஜபக்சவும், அவரது குடும்பத்தினர்களும் ஹெலிகாப்டர்கள் மூலம் வந்துள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு திரிகோணமலைக்கு வந்த அவர்கள், அங்குள்ள கடற்படை முகாமில் கடற்படையினரின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை சீனன்குடா விமானநிலையம் பகுதியில் இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜபக்சவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச, மகள் யசோதா ஆகியோர் ஏற்கனவே இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு வெளியேறவிட்ட நிலையில், தற்போது மகிந்த ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அவர் சீனன்குடா விமானநிலையத்தில் இருந்து தப்பிச் செல்லலாம் என்பதால், அந்த விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனால், அங்கு பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், மகிந்த ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பிச் செல்வாரா என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

CUET-PG தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

Saravana Kumar

ஹோட்டலில் உபசரிப்பு சரிவர இல்லாததால் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு!

Jayapriya

தைப்பொங்கல் கொண்டாட்டம்: பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

Jayapriya