உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் ; நிச்சயம் நல் வழி பிறக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரிமணியன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உக்ரைனில் இருந்து வெளியேறிவருகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்த நிலையில் போர் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பிய மாணவர்கள் தங்களது படிப்பை உள்நாட்டிலேயே தொடர அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், மாணவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இன்று காலை 10 மணி முதல் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள், உயர்கல்வி பயில தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதனை தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வில் பேசிய தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் செந்தில், உக்ரைனிலிருந்து மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை தொடர சாத்தியக்கூறுகள் இல்லை என பேட்டியளித்துள்ளார்.
காலை முதலே கள ஆய்வில் ஈடுபட்டுவரும் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரிமணியன், மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நிச்சயம் நல்வழி பிறக்கும் என்றும் தெரிவித்தார்.
அப்போது தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஒன்றிய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தந்துகொண்டே இருக்கிறார். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலத்தில் நிச்சயம் நல்வழி பிறக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.