மக்களை மையம் கொள்வதே மய்யத்தின் வேலை- கமல்ஹாசன்

மக்களை மையம் கொள்வது மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் வேலை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்ய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர்…

மக்களை மையம் கொள்வது மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் வேலை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதிமய்ய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 2024ஐ நோக்கி நகர்ந்து வருகிறோம். நாடாளுமன்ற தேர்தல் மட்டும் முக்கியம் தானா என்றால் இல்லை, 2026ல் வரும் சட்டப்பேரவை தேர்தல் அதைவிட முக்கியம் என்று கூறினார்.

மக்களை மையம் கொள்வது மட்டுமே மக்கள் நீதி மையத்தின் வேலை. மக்கள் நீதி மய்யம் யாருடைய பி டீம் என்றால் மக்களின் பி டீம் நாம். தேர்தல் நேரத்தில் ஒரு பூத்திற்கு 20 பேர் வேண்டும். இது சம்பளம் வாங்கி செய்யும் வேலை இல்லை.

மதத்தை சாட வேண்டியதோ சாதியை சாட வேண்டியதோ அவசியம் இல்லை. அது மக்களை பாதித்தால் அப்போது அதை பேச வேண்டும். தலைமை பொறுப்பு என்பது மேடை ஏறி பேசினால் மட்டுமே என்பதல்ல. பூர்த்தி செய்யப்படாத பதவிகள் உடனடியாக நிரப்பப்பட்டு விரைவில் பட்டியல் வெளியிடப்படும். இனி உங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தான், பொறுப்பும், அங்கீகாரமும் வழங்கப்படும்.

ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பழுதை சரிபார்க்கும் வேலையை கடினம் என பார்க்ககூடாது. மக்கள் நம் மீது வைத்திதுக்கும் மரியாதையை ஈரோட்டில் பார்த்தேன். அதை வலிமையாக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். தேர்தல் கூட்டணி பற்றி பேச இன்னும் நேரம் உள்ளது.

இந்திய இறையாண்மையை பாதுகாத்து தேசத்தை மறுபடியும் நல்ல பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். யாருக்கு தான் சர்வாதிகாரம் செய்ய பிடிக்காது. அதை செய்யாமல் இருப்பது தான் மனிதம். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை நோக்கி செல்ல நம் உதவி தேவைபடுகிறது. திராவிடம் என்றால் இரு கட்சிகள் தான் கூறி கொள்கிறார்கள். இறையான்மைக்கு ஒர் ஆபத்து என்றால் யார் கூப்பிட்டாலும் போக வேண்டும். அதனால் தான் காங்கிரசின் பாதயாத்திரைக்கு சென்றேன்.

வேகமாக உங்களை ஓட தூண்டும் முயற்சி தான் இந்த ஆலோசனை கூட்டம். உங்களிடம் திறமை உள்ளது. அதே வேளையில் செய்ய மனம் வேண்டும். சாதனை என்பது சொல்லல்ல, செயல். விமர்சனங்களை மட்டுமே பேசி கொண்டிருக்க முடியாது. நான் உங்களை எல்லாம் குழந்தைகளாக தான் பார்க்கிறேன். எவ்வளவு நல்ல தலைவர்களானாலும் தொண்டர்கள் சரியாக இல்லையேல் ஜெயிக்க முடியாது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.