ஒரே பாலின திருமணம் – 7 மாநிலங்கள் எதிர்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஒரே பாலின திருமணத்தை ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் உள்பட 7 மாநிலங்கள் எதிர்ப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

ஒரே பாலின திருமணத்தை ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் உள்பட 7 மாநிலங்கள் எதிர்ப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்சிபிசிஆர் தரப்பில், ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்யும் போது தாய்மை அடைய முடியாது என்றும், அவர்கள் குழந்தை பெற முடியாமல் குடும்பம் என்ற நிலையை அடைய முடியாது எனவும் வாதிடப்பட்டது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, தனி நபர் கூட ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்றும், உயிரியல் ரீதியான பிறப்பு கட்டாயம் இல்லை எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து மத்திய அரசு தரப்பில், ஒரே பாலின திருமணத்தை உத்தரப்பிரதேசம், மணிப்பூர், மகாராஷ்டிரா, சிக்கிம், ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாகவும், அந்த கடித நகல் அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பு தரப்பில், ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்ய அனுமதி அளிப்பது இந்து திருமண சட்டத்திற்கு எதிரானது என்றும், இதுபோன்ற தாராள கொள்கைகள் நமது கலாச்சாரத்தை புரட்டிப்போட்டு விடும் எனவும் வாதிடப்பட்டது.

மேலும், மற்ற மதங்கள், வெளிநாடுகள் நம் மீது ஆதிக்கம் செலுத்த வாய்ப்பாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டது. இதனிடையே, வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதியை விலக கோரிய தனி நபரின் மனுவை நிராகதித்த சந்திரசூட், வழக்கில் இருந்து விலக மறுத்துவிட்டார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.