தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – இன்று முதல் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் வருகிற 30ம்தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1ம் தேதி (இன்று) தொடங்கி வருகிற 30ம்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில்19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். இதில், வீடுகளின் எண்ணிக்கை, வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமையல் எரிவாயு பயன்பாடு, மின்வசதி, இணைய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக 33 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும்.

அதேபோல், சுய கணக்கெடுப்பில் பதிவு செய்தவர்கள், கணக்கெடுப்பு அலுவலர் வரும்போது, இணையத்தில் பதிவு செய்த விவரத்தை காண்பித்தால் போதுமானது. இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில்தான் குடும்ப உறுப்பினர்களின் முழுமையான விவரங்கள் சேகரிக்கப்படும். இந்தத் தரவுகள் தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் திட்டமிடல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், கொள்கை வடிவமைப்பு மற்றும் ஆய்வுகளுக்கு முக்கிய ஆதாரமாக அமையும்.

விரிவான, துல்லியமான கணக்கெடுப்பை உறுதி செய்வதற்காக, இந்தியாவில் முதல் முறையாக முழுவதும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. களப் பணியின்போது, ​​கணக்கெடுப்பாளர்கள் தரவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஒரு பிரத்யேக மொபைல் செயலியைப் பயன்படுத்துவார்கள். இது விரைவான செயலாக்கம், அதிக துல்லியம், தடையற்ற கணக்கெடுப்பு அனுபவம் ஆகியவற்றை வழங்கும். 1948-ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின்படி, சேகரிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களும் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்டு, ரகசியமாக வைக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.