லாலு பிரசாத் மற்றும் மகள்கள் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை!

நிலமோசடி புகார் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது…

நிலமோசடி புகார் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

முன்னதாக ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது, வேலைக்காக அணுகியவர்களிடம் இருந்து நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, அவர்களுக்கு குரூப்-டி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. எந்த விளம்பரமோ, பொது அறிவிக்கையோ இல்லாமல் இந்த நியமனங்கள் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வகையில், பாட்னாவில் சுமாா் 1.05 லட்சம் சதுர அடி அளவிலான நிலங்கள் லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றப்பட்டதாக புகார் இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, லாலு பிரசாத், ராப்ரி தேவி மற்றும் அவர்களது மகள் ஹேமா யாதவ் உள்பட 16 பேர் மீது சிபிஐ கடந்தாண்டு அக்டோபரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் பாட்னாவில் உள்ள லாலு மற்றும் அவரது மகள்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கையைக் கண்டித்து, அங்கு திரண்ட ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.