குகை வாழ்க்கை to உலகின் சக்தி வாய்ந்த மனிதர்: 3-வது முறையாக அதிபரான ஜி ஜின்பிங்!

சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் இன்று மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதுதவிர, சீன ராணுவ கமிஷன் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மவோவுக்குப்…

சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் இன்று மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதுதவிர, சீன ராணுவ கமிஷன் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மவோவுக்குப் பிறகு 2 முறைக்கு மேல் சீன அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதல் நபர் என்ற பெருமையையும் தற்போது ஜி ஜின்பிங் பெற்றுள்ளார். மேலும், இனி இவர் தனது வாழ்நாள் முழுவதும் அந்நாட்டின் அதிபராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும்
கூறப்படுகிறது.

இப்படி பேரும், புகழும்… உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் மிக முக்கியமான நபராக மாறிப் போன ஜி ஜின்பிங்கின் இந்த வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. சொல்லப்போனால் இவர் மாட மாளிகைகளையும் பார்த்துள்ளார். குகையையே தனது இருப்பிடமாகவும் மாற்றி வாழத்துள்ளார். இப்படிப்பட்ட வித்யாசமான அனுபவங்களை தனது வாழ்க்கையில் சந்தித்து பயணித்த ஜி ஜின்பிங்ன் தந்தை ஜி ஜாங்ஷன், மா சேதுங் உடன் புரட்சியாளராக இருந்தவர். ஒரு சமயம் சீனாவின் துணைப் பிரதமராகவும் இருந்துள்ளார்.

இருப்பினும் அரசுடன் இவர் பல விஷயங்களில் முரண்பட்டதால், கலாசார புரட்சியின் போது பல துன்புறுத்தல்களையும், சிறைச்சாலை வாழ்க்கையையும் இவர் அனுபவித்ததாகக் கூறப்படுகிறது. இப்படி துவக்கத்திலேயே பல ஏற்ற, இறக்கங்களை தன் அப்பாவின் மூலம் வாழ்கையில் சந்தித்த ஜி ஜின்பிங் ஒரு பொறியாளர் ஆவர். பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தில் தான் இவர் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்ற இவர், இளம் வயது முதலே கம்யூனிச கொள்கைகளின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இருப்பினும் அவரும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை.

இதனால், ஜி ஜின்பிங், தன்னுடைய இளம் வயதில் விவசாய தொழிலாளியாக மாறி வேலை பார்த்துள்ளார். தன்னுடைய இளமை காலத்தை பெரும்பாலும் கிராமப்புறங்களிலும் விவசாய நிலங்களிலுமே கழித்துள்ளார். இதன்வழியாக விவசாயிகளுடனான உறவை பலப்படுத்திக் கொண்டவர் அதுவே பிற்காலத்தில் மிகப்பெரிய தலைவராக உருவெடுக்க உத்வேகத்தை கொடுத்தது. சொல்லப்போனால் அந்த சமயங்களில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அவர் குகையில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. பின் அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு படிப்படியாக முன்னேற துவங்கியவர், தனது பயணத்தில் முக்கிய புள்ளியாக கடந்த 2012 இல் ஜி ஜின்பிங் ஆட்சியைப் பிடித்தபோது பலர் இவர்
நீண்டகாலம் சோபிக்கமாட்டார் என்று கூறினார்கள். தவறாக கணித்தார்கள். ஆனால் அதை தவிடு பொடியாக்கி 10 ஆண்டுகளை கடந்து இன்று 3 வது முறையாக அதிபர் பதவியை அலங்கரித்துள்ளார். இத்தகைய முன்னேற்றத்திற்கும், மாற்றத்திற்கும் முக்கிய காரணமே அவர் செயல்படுத்திய திட்டங்கள் தான்.

உதாரணமாக, ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்த ஜி ஜின்பிங், தனது ஆட்சியில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான தவறு செய்த அதிகாரிகளை பணியை விட்டு தூக்கினார். அதே போல் மாவோவை ரோல் மாடலாக கொண்ட ஜின்பிங்கின் அரசு சீனாவில் உள்ள பள்ளிகளில் கம்யூனிச சிந்தனை உள்ள பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டது.பின் ராணுவத்தின் பலத்தை வலுப்படுத்தினால் தான் உலகின் சக்தி வாய்ந்த நாடக, முக்கியமான வல்லரசாக திகழ முடியும் என்பதை உணர்ந்த ஜி ஜின்பிங், ராணுவத்தின் மீது அதிக கவனம் செலுத்த துவங்கினர் .

அதில் முக்கியமாக, சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ ஒத்திகைப் போர் நடத்தப்பட்ட போது சீன ராணுவம் செஞ்சீனப்படை மற்றும் நீலப்படை என இரு பிரிவாக பிரிக்கப்பட்டது. இதில் நீலப்படை என்பது அமெரிக்க பாணியில் போரிடும் வீரர்களின் பிரிவு. செஞ்சீனப்படை என்பது சீன பாணியில் போரிடும் வீரர்களின் பிரிவு. இந்த மாற்றத்திற்கு காரணம், சீன ராணுவ பலத்தை மெருகேற்றத்தான். அதன்படி, நவீன ஆயுதங்களுடன் ஒத்திகைப் போரில் ஈடுபட்ட இருபிரிவுகளிலும் அதிக முறை அமெரிக்க பாணியில் போரிடும் நீலப்படையே வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது .

இதனையடுத்து, சீன ராணுவத்தில் பல்வேறு மாற்றங்களை ஜி ஜின்பிங் கொண்டு வந்தார். இந்த ஒத்திகைப் போர் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், நாட்டு மக்களிடையே மிகப்பெரிய நன்மதிப்பை அவருக்கு பெற்றுதந்து. அதன் தொடர்ச்சியே சீன அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாகப் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீன வரலாற்றில் பல தலைமுறைகளுக்குப் பிறகு, ஒருவர் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு வந்துள்ளார். அங்கு மிகவும் வலிமையான நபர்களில் ஒருவராக ஜி ஜின்பிங் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் நியமிக்கப்பட்ட நிலையில், சீனா நாடாளுமன்றம் இன்று அவரை அதிபராக நியமித்துள்ளது. அவருக்கு எந்தவொரு எதிர்ப்பும் வராதபட்சத்தில், இன்னும் சில ஆண்டுகள் அவர் அதிபர் பதவியில் இருந்தால், சீனாவில் மிக நீண்ட காலம் அதிபர் பதவியில் இருந்த நபர் என்ற சாதனையைப் படைப்பார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.