ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் தனது எம்பி நிதியில் அமைக்கப்பட்ட நூலகங்களை திறந்து வைத்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியதை அவர் திருப்பி அனுப்பியது தவறு. சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றுவது மாநில அரசின் உரிமை. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ஒரு குற்றவியல் சட்டம்.
வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது என்பது புது புரளி. இதனை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக, ஆர்எஸ்எஸ் தூண்டிவிடுகின்றன. தமிழ்நாட்டில் வாழும் வெளி மாநிலத்தவருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. வதந்திகளை பரப்புவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறுவது தவறு. அது வளர்ச்சி அல்ல அது வீக்கம். வளர்ச்சி வேறு வீக்கம் என்பது வேறு. தவறான பிரச்சாரங்களின் மூலம் தமிழகத்தில் வளர பாஜக முயற்சிக்கிறது. இது தமிழகத்தில் எடுபடாது.
பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அடக்கி வாசிக்கின்றார்கள். பாஜக இல்லாத அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் வைஸ்ராய்கள் போல் செயல்படுகின்றார்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேட்டி அளித்தார்.








