பொன்னியின் செல்வன் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள படம் அகிலன். பூலோகம் படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் மீண்டும் இந்த படத்தின் மூலம் ஜெயம் ரவி உடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், தன்யா ராஜேந்திரன், தருண் அரோரா, ஜிராக ஜானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரிய எதிர்ப்பார்ப்பு மத்தியில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள இப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
அகிலன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி துறைமுகத்தில் சட்டவிரோத பல்வேறு கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவார். இதனால் அகிலனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என தனிப்படை முயற்சி செய்து வரும். துறைமுகத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அகிலன் கடத்தல் மன்னன் கபூரை சந்திக்க முயற்சி செய்து வருவார். அந்த நேரத்தில் பல்வேறு நாடுகளால் தேடப்படும் ஒரு சர்வதேச குற்றவாளியை இங்கிருந்து மற்றொரு நாட்டிற்கு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும். ஆபத்து நிறைந்த இந்த கடத்தல் வேலையை செய்ய அகிலன் முன் வருவார். அகிலன் அந்த சர்வதேச குற்றவாளியை கடத்தினாரா? இல்லை போலீஸில் சிக்கினாரா? என்பது தான் படத்தின் கதை.
முதல் பாதி துறைமுகம் மற்றும் அதில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகள் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் பாதி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் உடன் கதை பயணிக்கிறது.
படம் முழுவதும் கடல், கப்பல், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியே நடக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு துறைமுகம் சார்ந்து வெளியாகும் இந்த படத்தில் காட்சிகள் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் பட குழு அதிக மெனக்கடலில் ஈடுபட்டிருப்பது காட்சிகளை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது.
படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் திரைக்கதையில் அதிக கவனம் செலுத்துயிருப்பது படத்தில் நன்றாகவே தெரிகிறது. படத்தின் கதை இதுத்தான் என்று யூகிக்க முடிந்தாலும் காட்சிகள் மற்றும் சில திருப்புமுனைகள் அவற்றை மாற்றுகிறது.
சர்வதேச அரசியல், உணவு, கடத்தல் அதன் பின்னால் இருக்கும் வணிகம் என தன்னால் முடிந்த அளவுக்கு இயக்குனர் உலக அரசியலை விளக்க முயற்சி செய்துள்ளார். பூலோகம் படத்தில் பாக்ஸிங் மற்றும் அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை அக்கு அக்காக பிரித்த இயக்குனர் அகிலன் படத்தில் சரக்கு கப்பல்கள் பங்கு சந்தை மட்டுமல்லாமல் உலக அளவில் பல்வேறு வேலைகளை செய்கிறது என்பதை விளக்க முயற்சி செய்துள்ளார்.
ஜெயம் ரவியின் நடிப்பு சிறப்பு. தனி மனிதனாக படம் முழுவதும் வலு சேர்க்க முயற்சி செய்துள்ளார். குறிப்பாக அவரது உடல் எடையை அதிகரித்து ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்ப தன்னை தயார் செய்துள்ளது படத்தில் தெளிவாக தெரிகிறது.
பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளை நிறைவாக செய்துள்ளார். படம் முழுவதும் அவர் வந்தாலும் பெரிய அளவுக்கு அவரது கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டவில்லை. அதே போல ஒரு சில காட்சிகளில் மட்டுமே தான்யா ரவிச்சந்திரன் வந்து செல்கிறார்.
முக்கிய வில்லனாக வரும் தருண் அரோரா, அவருக்கு கீழ் வேலை செய்யும் ஹரீஷ் பேரடி, ஒரு காட்சியில் வந்தாலும் மிரட்டி விட்டு சென்ற தீனா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஆனால் பாடல் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அகிலன் படத்தில் பலவீனம் என்று சொல்லும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை. மொத்தத்தில் ஜெயம் ரவியின் வெற்றி பயணத்தில் இந்த படமும் ஒரு படமாக அமைய வாய்ப்புள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
-தினேஷ் உதய்







