“முதல்வர் மருந்தகங்களில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

அனைத்து முதல்வர் மருந்தகங்களிலும் தேவையான மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அம்முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “முதல்வர் மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு – மருத்துவத்துறையில் நிலவும் பிரச்சனையை தீர்க்க கவனம் செலுத்தாமல் TASMAC கிடங்குகளைச் சீரமைப்பதில் தனிக் கவனம் செலுத்தும் தவெக அரசு – “வீடு தீப்பிடித்து எரியும்போது, கிணறு வெட்டப் போனானாம்” என்பதையே நினைவுபடுத்துகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கானஉயிர் காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

உயிர்காக்கும் மருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கப்படவில்லை, உரிய கொள்முதல் ஆணைகள் வழங்கப்படவில்லை, தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என முதல்வர் மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கும் பல்வேறு காரணங்களால், மருந்துகளை வாங்க வரும் பொதுமக்களும் நோயாளிகளும் கடந்த சில மாதங்களாக ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டால், தனியார் மருந்தகங்களில் கூடுதல் விலை கொடுத்து மருந்துகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ள நிலையில் போதிய அளவில் மருந்துகள் இருப்பில் இல்லாததால் விற்பனை பாதிப்பு, வருவாய் இழப்பு என முதல்வர் மருந்தக உரிமையாளர்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

மக்களுக்குத் தேவையான மருந்துகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்து விநியோகிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மருத்துவத்துறை அமைச்சர் அவர்கள், முதல்வர் மருந்தகங்களில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டைப் போக்குவதில் உரிய கவனம் செலுத்தாமல், டாஸ்மாக் மதுபானக் கிடங்குகளைச் சீரமைப்பதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வருவதோடு, அத்தகைய பணிகளை நியாயப்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது.

“வீடு தீப்பிடித்து எரியும்போது, கிணறு வெட்டப் போனானாம்” என்ற பழமொழிக்கேற்ப, நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் அவசரமான சூழலில்கூட, அதனைச் சரிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்காமல் டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைப்பதில் கவனம் செலுத்துவது தவெக அரசின் நிர்வாக அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது.

எனவே, மருந்துகள் என்பவை வெறும் விற்பனைப் பொருட்கள் அல்ல; அவை நோயாளிகளின் உயிரோடும், அன்றாட வாழ்க்கையோடும் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்கள் என்பதை உணர்ந்து, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து முதல்வர் மருந்தகங்களிலும் நோயாளிகளுக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதையும், போதிய அளவில் இருப்பு வைக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும் என மருத்துவத்துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.