ஈரான் போரால் அமெரிக்காவுக்கு 48.3 பில்லியன் டாலர் செலவு?

ஈரானுக்கு எதிரான போரால் அமெரிக்காவுக்கு இதுவரை 48.3 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.3 லட்சம் கோடி) செலவாகியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 13-ம் தேதி நிலவரப்படி போருக்கான செலவு 48.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக பென்டகன் பட்ஜெட் அதிகாரி ஆர்தர் மில்லர், நவம்பர் 19 – வியாழக்கிழமை அமெரிக்க செனட் ஆயுதப்படைகள் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்க கடற்படையின் நிதிக் கட்டுப்பாட்டாளராக (Navy Comptroller) நியமிக்கப்படுவதற்கான ஒப்புதல் விசாரணையின்போது இந்த விவரத்தை அவர் வெளியிட்டார்.

ராணுவத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதம் எவ்வளவு?

அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால் வலியுறுத்தினார். ஆனால், அதற்கான மதிப்பீடு தன்னிடம் இல்லை என்று ஆர்தர் மில்லர் தெரிவித்தார். இதையடுத்து, செனட் ஆயுதப்படைகள் குழுவின் தலைவர் ரோஜர் விக்கர், ராணுவத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டை விரைவில் சமர்ப்பிக்குமாறு மில்லருக்கு உத்தரவிட்டார். ஈரானின் தாக்குதல்களால் அமெரிக்காவின் விமானப் படை ஹேங்கர்கள், ஏவுகணைகளைக் கண்டறியும் கண்காணிப்பு அமைப்புகள், கிடங்குகள் மற்றும் ராணுவ வீரர்கள் தங்கும் குடியிருப்புகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. இதனால் பல பில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு நாளைக்கு 32.5 மில்லியன் டாலர் செலவு?

ஈரானுக்கு எதிரான போரின் பொருளாதாரச் சுமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, டிரம்ப் நிர்வாகம் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்புத் துறை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கோரி வரும் நிலையில், போருக்கான செலவுகள் குறித்த கேள்விகள் அதிகரித்துள்ளன. இதற்கிடையே, அமெரிக்க கடற்படை ஈரான் கப்பல் போக்குவரத்துக்கு விதித்துள்ள முற்றுகையால் ஒரு நாளைக்கு சுமார் 32.5 மில்லியன் டாலர் செலவாகிறது என்று ஜனநாயகக் கட்சி செனட்டர் எலிசபெத் வாரன் தெரிவித்துள்ளார்.

மேலும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் பிராந்தியத் தலைமையகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 400 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த அமெரிக்க கடற்படையின் பொறுப்பு செயலாளர் ஹங் காவ், கடற்படை முற்றுகைக்கான தினசரிச் செலவை உறுதிப்படுத்தினார். ஆனால், பஹ்ரைன் ராணுவத் தலைமையகத்துக்கு ஏற்பட்ட சேதம் குறித்து முழுமையான மதிப்பீட்டை வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் தோல்வி!

இதற்கிடையே, ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க செனட்டில் கொண்டுவந்த தீர்மானத்தை குடியரசுக் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். நவம்பர் 19 – வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் பதிவாகின. இதனால் தீர்மானம் தோல்வியடைந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், War Powers Act சட்டத்தின் கீழ் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

போருக்கான செலவுகள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அமெரிக்க மக்கள் அதிருப்தியில் இருப்பதாக ஜனநாயகக் கட்சி செனட்டர் டிம் கேன் தெரிவித்தார். ஆனால், அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் பாதுகாக்கும் வகையில் போர் நடவடிக்கையை முடிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் வாதிட்டனர். இந்த வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சூசன் காலின்ஸ், லிசா முர்கோவ்ஸ்கி, ராண்ட் பால் ஆகியோர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜான் ஃபெட்டர்மேன் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலிலும் எதிரொலித்த போர்!

ஈரானுக்கு எதிரான போரும், அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்தன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தது தவறான முடிவு என்று 10 அமெரிக்கர்களில் சுமார் 6 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். போர் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் தொகுதிகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி குறிப்பிடத்தக்க தோல்விகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அடுத்த ஜனவரி மாதம் ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளனர். இதனால் ஈரான் போருக்கான செலவு மற்றும் அதன் பொருளாதார விளைவுகள் குறித்த விவாதங்கள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர் அதிகாரம் தொடர்பான அமெரிக்க அரசியலமைப்பு விதிகள்!

அமெரிக்க அரசியலமைப்பின்படி, போரை அறிவிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அதேநேரத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில் அதிபருக்கும் குறிப்பிட்ட ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வியட்நாம் போருக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட War Powers Act சட்டம், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிபர் நீண்டகாலம் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதைக் கட்டுப்படுத்துகிறது. பொதுவாக, 60 முதல் 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற விதிமுறையும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஈரான் போருக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் ஏற்கெனவே பலமுறை தீர்மானங்களைக் கொண்டுவந்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செனட்டிலும் இதுதொடர்பாக 12-க்கும் மேற்பட்ட முறை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. பெரும்பாலான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், ஈரான் போருக்கான செலவு தற்போது அமெரிக்க அரசியலில் மீண்டும் முக்கிய விவாதமாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.