பெரும் சலசலப்புடன் நந்திகிராமில் நடந்து முடிந்த வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் நேற்று இரண்டாம் கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தது. இந்நிலையில் பாஜக மற்றும் திரிணாமுல் கட்சியினர்களுக்கிடையே நந்திகிராம் தொகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294…

மேற்கு வங்கத்தில் நேற்று இரண்டாம் கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தது. இந்நிலையில் பாஜக மற்றும் திரிணாமுல் கட்சியினர்களுக்கிடையே நந்திகிராம் தொகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நந்திகிராம் தொகுதியிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் உள்ள போயல் மக்தாப் தொடக்கப்பள்ளியின் வாக்குச்சாவடி மையத்தில் பெரும் குழப்பம் மேலெழுந்தது. பாஜக வாக்குச்சாவடியை கைப்பற்றுவதாக கூறி திரிணாமுல் தலைவரும் தற்போதைய மாநில முதல்வருமான மமதா பானர்ஜி இந்த வாக்குச்சாவடியில் முகாமிட்டார். மேலும், ஆளுநர் ஜக்தீப் தன்கரை அழைத்து தனது குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

நந்திகிராம் தொகுதி அம்மாநிலத்தில் மிகவும் கவனத்திற்குரிய தொகுதியாக கருதப்படுகிறது. இத்தொகுதியில் உள்ள 355 வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக திரிணாமுல் கட்சியிலிருந்து 2016ல் இத்தொகுதியில் சுவெந்து அதிகாரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இதன் பின்னர் அவர் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடும் சுவெந்து, மமதாவுக்கு சவால் விடுத்தார். இதன் காரணமாக தனது சொந்த தொகுதியான பவானிபூரை தவிர்த்து சுவெந்து அதிகாரியை வீழ்த்த நந்திகிராமில் மமதா களமிறங்கியுள்ளார்.

இந்த பின்னணியில் நடைபெற்ற 2ம் கட்ட வாக்குப்பதிவில், பாஜகவினர் நந்திகிராம் தொகுதியை கைப்பற்றுவதாக மமதா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநரிடம், இத்தொகுதியில் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் , நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியை கண்டுள்ளதாகவும் மமதா விமர்சித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர். பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் எனும் முழக்கத்தினை வாக்கு சாவடியில் எழுப்பியதாக மமதா குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கெனவே வாக்குச்சாவடி மையத்தை சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பாஜகவின் தொண்டர் பலர் எவ்வாறு வாக்குச்சாவடி மையத்தில் குவிந்தனர் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த வாக்குவாதம் மோதலாக வெடிக்கத் தொடங்கியது. இரு தரப்பினரும் கற்களை கொண்டு தாக்கிக்கொள்ளத் தொடங்கினர். இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் மோதலை தடுத்து இரு தரப்பினரை பிரித்தனர்.

வாக்குச்சாவடிக்கு அருகே ஆயுதங்களுடன் சிலர் இருந்ததாகவும், வாக்களிக்க வந்த மக்களை அவர்கள் அச்சுறுத்தியதாகவும் மமதா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் மற்றும் பாஜகவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பம் அம்மாநில அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.