தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் பாமக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார்.
பாமக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் :
- 5 இலட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
- 2026-27, 2027-28 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் 2.5 இலட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட நான்காம் தொகுதிப் பணிகளுக்கு 35,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
- தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
- கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்படுவதைப் போல் போதைப் பொருளுக்கு எதிரான போர் (War Against Drugs) என்ற இயக்கம் தொடங்கப்படும்.
- தமிழ்நாடு காவல்துறையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். அதன் தலைவராக டிஜிபி நிலை அதிகாரி பணியமர்த்தப்படுவார்.
- கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் வணிகத்தில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
- ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை, இதில் குறைந்தபட்சம் ரூ.900 மாநில அரசின் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
- ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்படும்.
- நெல் முதல் எள் வரை அனைத்து விளைபொருட்களுக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.
- அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் புத்தகப்பை இல்லாத கல்விமுறை அறிமுகம் செய்யப்படும்.
- புத்தகப்பை இல்லாக் கல்வி முறையை செயல்படுத்துவதற்கு வசதியாக, 6ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவசக் கைக் கணினி வழங்கப்படும்.
- அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
- மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விலக்கு பெறப்படும்.
- உயர்கல்வி முடித்து 2 ஆண்டுகளுக்குள் பணியில் சேராத மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இந்தக் கடன் தொகையை அரசே செலுத்தும்.
- மாநில அரசின் சார்பில் சமூகநீதி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு) நடத்தப்படும்.
- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்படும்.
- குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- மகளிருக்கான உரிமைத் தொகை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும்.
- ஏழைத் தொழிலாளர்களின் நலன் கருதி, ரூ.10-க்குச் சோறு, சாம்பார், ரசம், தயிர், கூட்டு, பொரியல், ஊறுகாயுடன் நிறைவான மதிய உணவு வழங்கப்படும்.
- ஞாயிற்றுக் கிழமைகளில் ரூ.25-க்கு அசைவ மதிய உணவு வழங்கப்படும்.
- நியாய விலைக் கடைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் மானிய விலையில் வழங்கப்படும்.
- நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் வெள்ளைச் சீனியின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டு, அதற்கு இணையான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் மானிய விலையில் வழங்கப்படும்.







