முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கக் கோரி வழக்கு!

தமிழ்மொழி வளர்ச்சிக்கு 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, கடம்பூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் செம்மொழி என 6 மொழிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் பழமையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிக தமிழர்கள் உள்ளனர். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு என ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

14 ஆயிரம் நபர்களை மட்டும் கொண்ட சமஸ்கிருத மொழிக்கு கடந்த 3 வருடங்களில் ரூ.643.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள இந்தியா முழுவதும் 27 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட சமஸ்கிருதத்திற்கு 22% அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல.

எனவே, செம்மொழியான தமிழ்மொழி வளர்ச்சிக்கு 1000 கோடி அளவு நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றவும், இந்தியா முழுவதும் தமிழை கொண்டு செல்வதற்கு கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Advertisement:

Related posts

முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

Gayathri Venkatesan

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!

உலக சுகாதார நிறுவனம் கவலை!

Vandhana