வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் பெத்துரெட்டி பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, சங்கரேஸ்வரி பிள்ளைகள் கணேசன், சங்கர், ராமர், பிரபா இதில் பிரபாவை கடந்த ஆண்டு திருச்செந்தூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவர் 8-ல் மாத கர்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று பிரபாவுக்கு நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சாத்தூரில் இருந்து காரில் பழனிச்சாமி, சங்கரேஸ்வரி, மகன் சங்கர் உட்பட மொத்தம் 11 பேர் புறப்பட்டு சென்றனர். அப்போது தூத்துக்குடி குறுக்குசாலை அருகே வரும்போது எதிபாரதவிதமாக கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் பிரபாவின் தாய் சங்கரேஸ்வரி, உறவினரான ஆசிரியர் மருதாயி, ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். மேலும் 4 சிறுவர்,சிறுமி உட்பட 8 பேர் காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காரை ஓட்டி வந்த பழனிச்சாமி மகன் சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே வளைகாப்பு விசேஷ வீட்டுக்கு சென்ற இடத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.







