விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளான அஜய் மிஸ்ராவை விட்டது போல் பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சரண் சிங்கையும் விட்டுவிட முடியாது என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியுள்ளார்.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை கோரி ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பிப்லி மண்டி பகுதியில் மஹாபஞ்சாயத்து நடத்தினர். இதில் விவசாயிக்கு ஆதரவாக பங்கேற்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் அதனால் தான் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளதாகவும் கூறினார். தாங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையே கோருவதாகவும், இந்த கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனத்தை விட்டு ஏற்றி 4 விவசாயிகளை கொன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போன்று பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஜன் சரண் சிங்கையும் விட்டுவிடக் கூடாது என வலியுறுத்தினார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங்புனியா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, கடந்த 27 ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்ற நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தலைமையில், ஜன்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடர முயன்ற போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட, வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர்.
போலீசாரின் இந்த பலவந்த நடவடிக்கை சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு ஆளாகியது. இதன் பிறகு வீராங்கனைகள் தாங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசச் சென்றனர். அப்போது அவர்களை தடுத்த விவசாய சங்கத்தினர் தாங்கள் துணை நிற்பதாக கூறி பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். இதனை அடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் ஜூன் 15-ஆம் தேதிவரை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.







