பொது மருத்துவ கலந்தாய்வை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

பொது மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியின் 187ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.…

பொது மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் 187ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு 48 மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் சிவபாலன் என்ற சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் அனைத்து பாடங்களிலும் சிறப்பான மதிப்பெண் பெற்று, பல்வேறு வகையில் விருதுகளை பெற்றுள்ளார்.

மருத்துவத் துறையில், பொதுக் கலந்தாய்வை நமது முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். கடந்த மாதம் பொதுக் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. பொது கலந்தாய்வு குறித்த இந்த அறிவிப்பு வெளிவந்த உடனையே அப்போதைய துறையின் செயலாளர் செந்தில்குமார் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த அறிவிப்பால், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். இளங்கலை மற்றும் முதுநிலை கலந்தாய்வு மாநிலங்களின் பங்கை குறைக்கும் விதிமுறைகளுக்கு எதிரானது என பல்வேறு விஷயங்கள் குறிப்பிட்டு பொது கலந்தாய்வு ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கபப்டும். மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளோம். தமிழக மக்களின் கோரிக்கைகளாக மத்திய அரசிடம் முறையிடுவோம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தரவரிசை பட்டியலில் கடந்த ஆண்டு 16வது இடத்தில் இருந்த நமது மருத்துவ கல்லூரி, இந்த ஆண்டு 11வது இடத்தில் உள்ளது. பொது கலந்தாய்வை நடத்தினால் வட மாநில, வடகிழக்கு மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்க நேரிடும். நம் தமிழ்நாட்டு மாணவர்கள் இங்கே படிக்க வாய்ப்பில்லாமல் போகும். இதனால நமது மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக் குறியாகும். இது ஜனநாயக விதிகளை மீறியதாக அமையும். பொது கலந்தாய்வு குறித்து மத்திய அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்காமல், நடத்தியே தீருவோம் என நின்றாள் முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து சட்டபூர்வமாக நடவடிக்கையை எடுக்கப்படும். பாஜக ஆளும் மாநிலங்களில் கூட பொது கலந்தாய்வை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் ஜூன் 15 ஆம் தேதி திட்டமிட்டப்படி கிண்டி பண்ணோக்கு மருத்துவமனை திறக்கப்படும். கிண்டி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைத்தது உண்மை. அவர் வருவதாக கூறியிருந்ததும் உண்மை. குடியரசு தலைவர் திறப்பு விழாவில் பங்கேற்பாரா இல்லையா என்பது ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும். எது எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட தேதியில் கண்டிப்பாக திறப்பு விழா நடக்கும் என கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், திறப்பு விழா முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு டெல்லி சென்று மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். பொது கலந்தாய்வு நடந்தால் பெரிய பாதிப்பு ஏற்படும். நிச்சயம் பொது கலந்தாய்வை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என குறிப்பிட்டார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.