சீன ராணுவம் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இதில், 27 கட்சிகளை சேர்ந்த 37 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தை சுமூகமாக நடந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகளை கேட்டு கொண்டதாக குறிப்பிட்டார். பாதுகாப்பு காரணங்களால் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் அந்த கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகளை பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார். குஜராத் கலவரம் குறித்து BBC வெளியிட்டுள்ள ஆவண படம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக கோரிக்கை வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.







