காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம், ஜம்மு காஷ்மீரில் இன்று நிறைவடைந்தது.
கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவடைந்துள்ளது. நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் ஏறத்தாழ 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் பயணம் செய்த ராகுல் காந்தி, காஷ்மீரில் இன்று தனது நடைபயணத்தை முடித்துக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இறுதி நாளான இன்று நடைபயணம் மேற்கொண்ட அவருக்கு, பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்து ராகுல் காந்தி வீரவணக்கம் செலுத்தினார்.
இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. கடும் பனிப்பொழிப்பொழிவுக்கு நடுவே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். திமுக சார்பில் மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பொதுக்கூட்டத்தில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ஒற்றுமை நடைபயணத்தில் நிறைய கற்றுக்கொண்டதாக கூறினார். பயணத்தின் போது மக்கள் அளித்த ஆதரவு, கண்ணீரை வரவைத்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த நடைபயணத்தை தனக்காகவோ அல்லது காங்கிரஸ் கட்சிக்காகவோ மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்த அவர், நாட்டு மக்களுக்காக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டதாக கூறினார். இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜம்மு காஷ்மீரில், தான் தாக்கப்படலாம் என்ற எச்சரிக்கப்பட்டதாக கூறிய ராகுல் காந்தி, காஷ்மீர் மக்கள் கைக்குண்டுகளுக்குப் பதில் தனக்கு அளவற்ற அன்பைத் தந்ததாக தெரிவித்தார். முன்னதாக இந்திய ஒற்றுமை நடைபயண நிறைவு கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் பனிப்பொழிவில் உற்சாகமாக விளையாடினர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை வீசி மகிழ்ந்தனர்.







