மது வாசனையை மட்டும் வைத்து குடிபோதையில் ஒருவர் இருந்ததாக வழக்குத் தொடர முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சலீம் குமார். இவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மதுபோதையில் பிரச்னை செய்ததாகக் கூறப்பட்ட குற்றவாளி ஒருவரை அடையாளம் காண்பிப்பதற்காக, இரவு 7 மணியளவில் காவல் நிலையத்துக்கு போலீசார் என்னை அழைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் யார் என்பது எனக்கு தெரியவில்லை. அவரை அடையாளம் காண முடியாததால், தான் காவல் நிலையத்தில் மதுபோதையில் கலவரத்தில் ஈடுபட்டதாக என் மீது பொய் வழக்குப் பதிவு செய்தனர் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மது வாசனையை மட்டும் வைத்து ஒருவர் போதையில் இருந்ததாக வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றும் அதுமட்டுமே போதுமான ஆதாரமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
‘யாருக்கும் இடையூறு இல்லாமல் அல்லது தொந்தரவு செய்யாமல் தனிப்பட்ட இடத்தில் மது அருந்துவது எந்தக் குற்றத்தையும் ஏற்படுத்தாது. மதுவின் வாசனையை மட்டும் வைத்து ஒரு நபர் குடிபோதையில் இருந்ததாகவோ அல்லது மதுவின் தாக்கத்தில் இருந்ததாகவோ பொருள் கொள்ள முடியாது. காவல் நிலையத்தில் கலவரத்தில் ஈடுபட்டார் என்பதை உறுதி செய்ய, கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.







