கஞ்சாவை பயன்படுத்தி மருந்து தயாரிப்பதற்காக, மத்திய அரசிடம் இருந்து மானியம் பெருகிறார் கேரளாவைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர்.
பொதுவாக கஞ்சாவை போதைக்குப் பயன்படுத்துவதே அதிகம். அதை வைத்திருந்தாலோ, விற்றாலோ, உபயோகித்தாலோ கைதுதான். இதற்கிடையே சட்டவிரோத கஞ்சா விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. கஞ்சா விற்றதாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சில வளர்ந்த நாடுகளில் நோய்க்கு மருந்தாக, கஞ்சாவைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா உட்பட சுமார் 34 நாடுகளில் கஞ்சாவை, மருத்துவத்துக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை நிவேதிதா, துளசியை போன்று கஞ்சா மருத்துவக் குணம் கொண்டது என்றும் இந்தியாவில் அது தடை செய்யப்படுவதற்கு முன் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர் கஞ்சாவை பயன்படுத்தி மருந்து தயாரிக்க மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற்றுள்ளார். திருச்சூரை சேர்ந்த கண்டம்புலி கிருஷ்ணன் வைத்தியரின் அடுத்த தலைமுறையை சேர்ந்தவரான இவர், மணிலாவில் எம்.பி.ஏ முடித்துவிட்டு, வெளிநாடுகளில் பணியாற்றியுள்ளார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளாவில் தொழில் தொடங்கி இருக்கிறார்.
இவர் கஞ்சாவை பயன்படுத்தி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கும் நிவாரணி உட்பட பல்வேறு வலி நிவாரணி மருந்துகளை தயாரித்து வருகிறார். இதற்காக மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற்றுள்ளார்.








