ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தனது சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இபிஎஸ் தரப்பில் தேர்தல் பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அவரது தரப்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பக தோப்பு பகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது குலதெய்வ கோயிலான வன பேச்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு இன்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார். மேலும் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு வருகிற 31-ம் தேதி முதல் துவங்குகிறது. எனது சார்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.







